ராணுவத்தை விலக்கி கொள்ள பரஸ்பர முடிவு: மோதல் தொடர்பாக இந்தியா, சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது...இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி இரவு கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி  ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து  43 பேர் என கூறப்படுகிறது.

45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா - சீனா ராணுவம் இடையேயான  மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று  வருகிறது. இதற்கிடையே, நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கி கொள்ள பரஸ்பர முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா சீனா இடையே ராணுவ மேஜர் ஜெனரல் அளவிலான இருதரப்பு பேச்சுவார்தை மோல்டா பகுதியில் சுமார் 11 மணி நேரம் நீடித்தது. தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் படைகளை திரும்பப் பெற பரஸ்பரம் ஒப்புதல் செய்யப்பட்டதாகவும், கிழக்கு லடாக்கின் சர்சைக்குரிய பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் மோதல் தொடர்பாக இந்தியா, சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.  

Related Stories: