முழு ஊரடங்கின்போது பிறந்தநாள் விழா; 50 ரவுடிகள் புடைசூழ அரிவாளால் கேக்வெட்டி கொண்டாடிய வாலிபர்

* பிரியாணி, மது விருந்துடன் பார்ட்டி

* நள்ளிரவில் பட்டாசு, வாணவேடிக்கை

* பெரும்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்

சென்னை: வண்டலூர் அருகே உள்ள லாரி ஷெட்டில் கடந்த 2018ம் ஆண்டு பிரபல ரவுடி பினு, 120 ரவுடிகள் புடைசூழ ஆட்டம் பாட்டம், வாண வேடிக்கையுடன் தனது பிறந்தநாளை அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினார். போலீசார் சுற்றி வளைத்தபோது தப்பிய ரவுடி பினு,  பின்னர் அம்பத்தூர் துணை கமிஷனர் முன்னிலையில் சரணடைந்தார். அதை தொடர்ந்து சென்னையில் உள்ள இளம் ரவுடிகள் பலர் தங்களது பிறந்தநாளை பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி கொண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், மேலும் ஒரு சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கடந்த 19ம் தேதி நள்ளிரவு பெரும்பாக்கம் பகுதியில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தார். இதில், பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய இளம் ரவுடிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பிரியாணி மற்றும் மது விருந்து அளித்த ஓட்டேரி வாலிபர், ரவுடிகள் புடைசூழ 2 அடி அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது, இளம் ரவுடிகள் சார்பில் அந்த வாலிபருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தும், தலையில் மலர் கிரீடம் மற்றும் சால்வைகள் அணிவித்தும் ‘எங்கள் குலசாமியை நீங்கள் தான்’ என்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி உள்ளனர்.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ பிறந்த நாள் விழா நடந்துள்ளது. மேலும், பிறந்தநாளில் திருவிழாவின் போது பயன்படுத்தும் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கை நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த பிறந்தநாள் விழாவில், ஓட்டேரியை சேர்ந்த ரவுடி கார்த்திக், எஸ்.ஆர்.ராஜசேகர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கலந்து கொண்டுள்ளனர். போலீசாரால் தேடப்படும் ரவுடிகள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியது பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: