காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகளை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள்

காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யமுடியாமல் அவதியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷார், பெரும்பாக்கம், கூரம், கோவிந்தவாடி அகரம், முசரவாக்கம், கீழ்கதிர்பூர், வாலாஜாபாத், ஊத்துக்காடு உள்பட பல பகுதிகளில் காய்கறிகள், கீரைகள் அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் பல்வேறு இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை என அறிவித்துள்ளது. ஆனால், காஞ்சிபுரத்தில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் நகராட்சி ஊழியர்கள், போலீசார் விவசாயிகளை அலட்சியப்படுத்துவதாக புகார் கூறுகின்றனர்.காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் செவிலிமேடு, சின்ன காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை உள்பட பல பகுதிகளில் சாலைகளில் பேரிகார்டுகள் அமைத்து, வெளியில் இருந்து யாரும் நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்களை எடுத்து வரும் விவசாயிகளை, நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாகவும் அவமரியாதையாக பேசுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறி எடுத்து வந்த விவசாயியை அனுமதிக்க மறுத்ததால், சாலையில் காய்கறிகளை வீசி எறிந்தார். அவரிடம், காவல்துறை மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது. அதேபோல் காஞ்சிபுரத்தில் நகராட்சி அதிகாரிகள், விவசாயிகளிடம் நடந்து கொள்வது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறுகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் காய்கறிகள், பழங்களை மொத்தமாக விற்பனை செய்யமுடியாமல், வேறு வழியின்றி சாலை ஓரங்களில் வைத்து விற்பனை செய்கிறோம். அதையும் நகராட்சி அதிகாரிகள் வாகனத்தில் அள்ளி செல்கின்றனர் என வேதனையுடன் கூறுகின்றனர்.

Related Stories: