லாக்காடு கேப் சாலையில் டெட்டனேட்டர் குவியல் : மூணாறில் பொதுமக்கள் அதிர்ச்சி

மூணாறு: மூணாறு, லாக்காடு கேப் சாலையில் பாறைகளுக்கு இடையே 100க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருந்த வெடிமருந்து பையை போலீசார் மீட்டனர். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு கேப் சாலை உள்ளது. இந்த சாலையில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த 5ம் தேதி முதல் விரிவாக்கப்பணி நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 17ம் தேதி இரவில் லாக்காடு கேப் சாலையில், மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையை மூடியது. இதனிடையே, லாக்காடு கேப் சாலையில் பாறைகளுக்கு இடையே சக்தி வாய்ந்த வெடிமருந்து நிரம்பிய பையை பொதுமக்கள் கண்டுபிடித்தனர். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து சாந்தான்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சிறப்பு துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஜின்சன் தலைமையிலான போலீசார் லாக்காடு கேப் சாலையில், வெடிமருத்து நிரம்பிய பையை மீட்டனர்.

அதில், 100க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருந்தன. பாறைகளை பிளக்க பயன்படுத்தும் இந்த சக்திவாய்ந்த வெடி மருந்துகள், சாலையில் பாறைகளுக்கு இடையே வந்தது எப்படி, இவை சமூக விரோதிகள் கையில் சிக்கியிருந்தால் என்ன ஆவது என போலீசார் விசாரித்து வருகின்றனர். லாக்காடு கேப் சாலையில் சக்தி வாய்ந்த வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால், மண்சரிவு ஏற்பட்டதா என விசரித்து வருகின்றனர்.

Related Stories: