மரக்காணம் அருகேயுள்ள 2 கிராம ஏரி நீரை சென்னை குடிநீருக்கு பயன்படுத்த ரூ.161 கோடியில் புதிய திட்டம்: ஆண்டுக்கு 2 டிஎம்சி கிடைக்கும்

சென்னை: சென்னை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் புதிய திட்டத்துக்கு ₹161 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர் மட்டம் உயரவில்லை. இதை தொடர்ந்து புதிதாக குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு, வண்டிப்பாளையம் ஆகிய கிராமப்பகுதிகளில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கழுவேலி ஏரி நீரை நன்னீராக மாற்றி சென்னை குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. நீர்வளத்துறை மேம்பாட்டு குழு சார்பில் இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திட்ட பணிக்கென ₹161 கோடி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, கழுவேலி ஏரி சென்னையில் இருந்து சுமார் 110 கி.மீ தூரத்தில் உள்ளது.

இங்கிருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக, கழுவேலி ஏரி பகுதிகளில் எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க, அங்கேயே ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அதே போன்று கழுவேலி ஏரியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், ரெகுலேட்டர் வைத்து தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. மேலும், அந்த ஏரி முழுவதும் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஏரியில் 6 டிஎம்சி வரை சேமித்து வைக்க முடியும். இந்த ஏரி மூலம் ஆண்டுக்கு 2 டிஎம்சி அளவுக்கு சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பெற முடியும். தற்போது பொதுப்பணித்துறை சார்பில், டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: