சிவகங்கை மாவட்டத்தில் சீர்குலைந்த சிறுதொழில்கள்

சிவகங்கை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், சிவகங்கை மாவட்டத்தில் சிறு தொழில்கள் சீர்குலைந்து போயுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தொழில்கள் எதுவும் இல்லை. காய்கறிகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, நெல்லிக்காய் ஏற்றுமதி, தேங்காய் ஏற்றுமதி, தேங்காய் நாரில் இருந்து கயிறு உற்பத்தி, மண்பாண்டத்தொழில் செக்கு எண்ணெய் உற்பத்தி, பாக்குமட்டையில் தட்டுகள் உற்பத்தி, பேக்குகள் உற்பத்தி, அட்டைப்பெட்டிகள் உற்பத்தி என மாவட்டம் முழுவதும் பல்வேறு சிறு தொழில்கள் செய்யப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டம், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறு தொழில் உற்பத்தி பொருட்கள் மூலம் மாதந்தோறும் ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் நடந்து வருகிறது.

இத்தொழில்கள் தனியாகவும், அரசின் சிட்கோ தொழிற்கூடங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் 25ல் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கில் அவ்வப்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டாலும் அவைகள் தொழில் நிறுவனங்களை முழுமையாக இயக்கும் அளவிற்கோ, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் நிலையிலேயோ இல்லை. சுப நிகழ்ச்சிகள், கோயில் விசேஷங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை தொடர்கிறது. திருமணம் சிறிய அளவில் நடந்தாலும் அதிலும் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி ஏற்றுமதி, எண்ணை, பாக்குமட்டை தட்டுகள், பேக்குகள் உள்ளிட்டவைகளின் தேவை முழுமையாக இல்லாமல் போனது. இவைகளின் விற்பனை மற்றும் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த இரண்டரை மாதங்களாக இதே நிலை நீடிக்கிறது.

ஊரடங்கு உத்தரவால் வெளிமாவட்டங்களில் வேலை பார்த்தவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். இந்த மாவட்டத்தில் தொழிலாளர்களாக உள்ளவர்களுக்கும் வேலை இல்லை. தினக்கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள், சிறு நிறுவன தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சரிவர வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பாக்குமட்டையில் தட்டுகள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவன உரிமையாளர் மோகன் கூறியதாவது, ‘‘கடந்த மார்ச் இறுதி முதல் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இயந்திரங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித வருமானமும் இல்லாமல் நிறுவனம், இயந்திரங்கள் பராமரிப்பு, கரெண்ட் பில் என செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மக்களிடம் பணம் இருந்தால் மட்டுமே வியாபாரம் இருக்கும். ஆனால் அத்தியாவசிய தேவைகளையே குறைத்துக் கொள்ளும் நிலையில் பொதுமக்கள் உள்ளதால் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் சிறு தொழில் செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து எப்படி மீள்வோம் என தெரியவில்லை’’ என்றார்.

விவசாயமும் பாதிப்பு

சமூக ஆர்வலர் திருமலை அய்யனார் கூறியதாவது, ‘‘ஊரடங்கு காரணமாக விவசாய பணிகளும் குறைந்துள்ளது. இதனால் விவசாய தொழில் தெரிந்தவர்கள் எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்துவதே கடினம். சிறு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் பாதிப்பை சரிசெய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: