துபாயில் சிக்கிய 516 பேர் சென்னை திரும்பினர்

சென்னை : துபாயில் சிக்கியிருந்த 516 பேர் சென்னை திரும்பினர். கொரோனா ஊரடங்கில் இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக துபாயில் சிக்கிய 516 இந்தியர்கள் 3 தனியார் விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு குடியுரிமை, சுங்க சோதனை மட்டும் நடத்தப்பட்டன. மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை.

இதனால், பஸ்களில் ஏற்றப்பட்டு சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரிய மேடு, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், எழும்பூர், தி.நகர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அனைவருக்கும் சென்னை மாநகராட்சி மருத்துவ குழுவினர் அவர்கள் தங்கும் இடத்துக்கு நேரில் சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்துவார்கள். அதை அரசு அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Related Stories: