இடைக்கழிநாடு பேரூராட்சியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு

*பொதுமக்கள் கடும் சிரமம்

செய்யூர் : இடைக்கழிநாடு பேரூராட்சியில் தினமும் அறிவிக்கப்படாமல் ஏற்படும் மின்தடையால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.

செய்யூர் தாலுகாவில் அமைந்துள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில் 8500 க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பு பெற்றுள்ளனர். இங்கு செய்யூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.

பேரூராட்சியில் உள்ள கடப்பாக்கம் பகுதியில் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. அதேபோல் 24 மணிநேரமும் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அஞ்சல் நிலையம், இந்தியன் வங்கி, கூட்டுறவு வங்கி, ஒரு தனியார் வங்கி, ஒரு அரசு மற்று 3 தனியார் பள்ளிகளும், கிளை நூலகம், வர்த்தக நிறுவனங்கள் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

எந்நேரமும்  மின் அவசியம் உள்ள பேரூராட்சியில், கடந்த 3 மாதமாக தினமும் 10 முறைக்கு மேல் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதனால் மருத்துவமனை, வங்கிகள், முக்கிய வர்த்தக நிறுவனங்களில் தொடர்ந்து ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முறையாக மின்சாரம் கிடைக்காததால் பல்வேறு பணிகளிலும், தொழில்களிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புகார் செய்ய, இளநிலைப் பொறியாளர் அலுவலக தொலைபேசியை தொடர்பு கொண்டால், யாரும் எடுப்பதில்லை. நேரடியாக சென்றால் அங்குள்ள மின்வாரிய ஊழியர்கள், பல்வேறு காரணங்களை கூறி அனுப்பி விடுகின்றனர் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

ஆனால், மின்வாரிய ஊழியர்கள் அங்குள்ள பண்ணை வீடுகளுக்கு நீச்சல் குளம் அமைத்து கொள்ள மின்வினியோகம் வழங்குவது, தனிப்பட்ட நபர்களிடம் கையூட்டு பெற்று கொண்டு மின் இணைப்பு வழங்குவது என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி மதுராந்தகம் மின்வாரிய கோட்ட பொறியாளரிடமும், செய்யூர் துணைமின் நிலைய அதிகாரிகளிடமும் பலமுறை, பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். ஆனாலும் அறிவிப்பில்லாத மின்தடைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடைகளால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் அவதியடைகின்றனர்.எனவே, அறிவிக்கப்படாத மின் வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: