சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

*மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்

சென்னை : சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் ஆணையர் கவிதாவின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் மீண்டும் கூடுதல் ஆணையர் (விசாரணை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பழைய உற்சவர் (சோமாஸ்கந்தர்) சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, இந்து  அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், சிற்ப சாஸ்திரத்தின்படி சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், சிவகாமி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கம் பெற்றப்பட்டு சிலை செய்யப்பட்டது. இந்த சிலையில் தங்கம் சேர்ப்பத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் சிலை  செய்ததில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி,  சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், போலீசார் நடத்திய விசாரணையில், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா, ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள கவிதாவின்  வீட்டுக்கு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2018 ஜூலை 31ம் தேதியன்று அவரை கைது செய்தனர். பின்னர், அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2018 அக்டோபர் 10ம் தேதி கவிதாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இவ்விவகாரம் தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கவிதா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, அவர் கூடுதல் திருப்பணி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் கூடுதல் ஆணையர் (பொது) நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கவிதா கூடுதல் ஆணையர் (பொது) பொறுப்பு ஏற்றுக்ெகாண்டார். இந்த நிலையில் நகை சரிபார்ப்பு இணை ஆணையர் வான்மதி கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: