சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 22ம்தேதி முதல் 26ம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 22ம் தேதி முதல் வீடு வீடாக சென்று ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவதால், இந்த பகுதிகளில் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று அதிகாலை முதல் 30ம் தேதி இரவு வரை 12 நாட்களுக்கு, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

இந்த பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அதனை வருகிற 22ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை செயல்படுத்தும் விதமாக, 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளர்கள் மூலமாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும்.

எனவே, 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை உள்ள நாட்களில் நியாயவிலை கடைகள் செயல்படாது. இந்த பகுதிகளில் இதுவரை ஏறக்குறைய 78 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுச் சென்றுள்ளார்கள்.  மேலும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு உண்டான அத்தியாவசிய பொருட்களை 27ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: