வருவாய் இல்லாததால் கிடுகு பின்னும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த கிடுகு பின்னும் தொழிலாளர்கள் உரிய வருவாயின்றி தவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள சாமியார்புதூர், ஜீவா நகர், சின்ன கரட்டுப்பட்டி,  அரசப்பிள்ளைபட்டி,  சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் தென்னைமட்டைகளால் கிடுகு பின்னும் தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் பின்னப்படும் கிடுகு மட்டைகள் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

வழக்கமாக கோடைகாலத்தில் கிடுகு பின்னும் தொழில் தீவிரமடைவது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வரவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் உள்ளூர் வியாபாரிகள், குறைந்த விலைக்கு கிடுகுகளை வாங்குகின்றனர். இதனால் கிடுகு பின்னும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட கிடுகு பின்னும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: