சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. தினசரி 1500க்கும் மேற்பட்டவர்களுக்கும், சென்னையில் ஆயிரம் பேருக்கு அதிகமாகவும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. ஜூன் 16ம் தேதி நிலவரப்படி சென்னையில் 34,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18,565 பேர் குணமடைந்துள்ளனர். 422 பேர் மரணம் அடைந்துள்ளனர். 15,527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா ஒழிப்பு பணிகள் மற்றும் ஜூன் 19 முதல் 30 வரையிலான முழு ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர், உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி பங்கஜ் குமார் பன்சால்,  15 மண்டலங்களில் தினசரி நோய் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த  நியமிக்கப்பட்டு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்  அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: 200 வார்டுகளுக்கும் மைரோ அளவில் ஆய்வு நடத்தப்படும். மாநகராட்சி, சுகாதார துறை இணைந்து காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு தொடர்பாக நுண்ணிய அளவில் அலசி  ஆராய்ந்துள்ளோம். அரசின் கடமை செய்துள்ளது. மக்களும் கடமையாற்ற வேண்டும். கொரோனா சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு நாள் ஏற்றம் இறக்கம் வைத்து நாம் எதுவும் கூறமுடியாது. நேற்று குறைவு மகிழ்ச்சி. சோதனையும் குறைவாக நேற்று செய்யப்பட்டது. இன்று அதிகமாக எடுத்துள்ளோம். பாசிடிவ் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து குறைந்தால்தான் கொரோனா குறைந்துள்ளதாக கூற முடியும். நேற்று தொற்று குறைந்தது போல தொடர்ந்து குறைந்தால் தான் முழுமையாக குறைந்ததாக கூற முடியும் என்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்த லாக்டவுனுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

சென்னையில் தினசரி நடைபெறும் காய்ச்சல் முகாம் தொடர்பான தகவல், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வீடுகள் தொடர்பான தகவல், சோதனை மையங்க உள்ளிட்ட தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மண்டலம்    பாதிப்பு

ராயபுரம்        5,486

தண்டையார்பேட்டை    4,370

தேனாம்பேட்டை    4,143

கோடம்பாக்கம்    3,648

திரு.வி.க.நகர்    3,041

அண்ணாநகர்    3,431

அடையாறு        1,931

வளசரவாக்கம்    1,444

திருவொற்றியூர்    1,258

அம்பத்தூர்        1,190

மாதவரம்        922

ஆலந்தூர்        699

பெருங்குடி        646

சோழிங்கநல்லூர்    639

மணலி        483

Related Stories: