மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு காசிக்கு அனுப்பி வைக்கக் கோரி சாதுக்கள் அரைநிர்வாண ஓட்டம்

மதுரை: காசிக்கு செல்ல ஏற்பாடு செய்யக்கோரி, சாது அரை நிர்வாணத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் ஓடிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம், காசி பகுதியைச் சேர்ந்த சாதுக்கள் ரகுவார்தாஸ் நாகா பாபா (65), கமல்தாஸ் ஹிலாரி (33) இருவரும், கடந்த மார்ச் 15ம் தேதி காசியில் இருந்து ரயிலில் புறப்பட்டு, 18ம் தேதி ராமேஸ்வரத்திற்கு வந்தனர். அங்கு புனித நீராடி விட்டு சில நாட்கள் தங்கியிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இவர்களால் காசிக்கு செல்ல முடியவில்லை. 85 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்ந்து நீடித்ததால் மிகவும் சிரமமடைந்தனர்.  தங்களை காசிக்கு அனுப்பி வைக்கும்படி, ராமேஸ்வரத்தில், அதிகாரிகளிடம் முறையிட்டும். எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், ‘மதுரை செல்லுங்கள். அங்கிருந்து காசிக்கு செல்ல மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்’ என அதிகாரிகள் கூறி, ராமேஸ்வரத்தில் இருந்து பஸ்சில் ஏற்றி நேற்று மதுரை அனுப்பினர்.

 இரு சாதுக்களும் நேற்று மதியம் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென்று அவர்களில் ஒருவர் அரைநிர்வாண கோலத்துடன் கலெக்டர் அலுவலக நுழைவாயிலை நோக்கி ஓடினார். அப்போது கலெக்டர் கார் வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி முறையாக ஆடை அணிந்து வருமாறு கூறினர். பின்பு கலெக்டர் வினய், 2 சாதுக்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், ‘‘ஊரில் பூஜை செய்த புனித நீரை ராமேஸ்வரம் கடலில் கலக்க ராமேஸ்வரம் வந்தோம். ஊரடங்கால், சிக்கிக்கொண்டோம். தங்களை காசிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 85 நாட்களுக்கு மேலாக ஊருக்குச்செல்ல வழி தெரியாமல் தவிக்கிறோம். எங்களுக்கு கொரோனா கிடையாது. வேண்டுமென்றால், பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என கூறினர். இதனைக்கேட்ட கலெக்டர், ‘‘அரசு அனுமதி பெற்று, ஊருக்கு செல்ல  ஏற்பாடு செய்கிறோம். அதுவரை பாதுகாப்பாக முகாமில் தங்கி இருங்கள்’’ எனக்கூறி அனுப்பி வைத்தார்.

Related Stories: