கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு சென்னையில் 400 இடங்களில் வாகன சோதனை

* 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை

* பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 19ம் தேதி முதல் 30ம்தேதி வரை அதாவது 12 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை சார்பில் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் தற்போது எடுக்கப்படும் நடவடிக்கையை காட்டிலும் முழு ஊரடங்கின் போது கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி நூறடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, போரூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை என 400 முக்கிய இடங்களை தேர்வு செய்து சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது விதிக்கப்படும் தடை காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வசிக்கும் வீடுகளின் அருகே உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதை மீறி பைக் மற்றும் கார்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக வெளியே சென்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து பைக் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்படும். மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அடையாள அட்ைட வழங்க வேண்டும்.  அனுமதி அளிக்கப்பட்ட அரசு பணியாளர்கள் பணிக்கு செல்ல வேண்டும் என்றால் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் அவசர தேவையை தவிர்த்து இயக்கினால் வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

* அத்தியாவசிய பொருட்களை வீடுகளின் அருகே உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்

* அதை மீறி பைக் மற்றும் கார்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றால் வழக்குப்பதிவு செய்து பைக் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்படும்.

Related Stories: