கேரளாவில் இருந்து வாளையார் அணை வழியாக கோவைக்குள் ரகசியமாக நுழையும் பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்

கோவை: கேரளாவில் இருந்து வாளையார் அணைக்குள் இறங்கி கோவை மாவட்டத்திற்குள் ரகசியமாக நுழையும் பொதுமக்களால் கோவையில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் வாளையார் அணை உள்ளது. இதில், 64 அடி வரை நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் பாசனம் பெறும் நிலப்பரப்பு அனைத்தும் கேரளாவில் உள்ளது. இந்த அணையில், தமிழக எல்லையில் உள்ள எட்டிமடை, க.க.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரும் தேக்கப்படுகிறது. இந்த அணையில் தற்போது தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது. சில இடங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலை வழியாக செல்லும் நபர்கள் வாளையார் சோதனைச்சாவடி அருகே சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கேரளாவில் இருந்து ரயில் பாதை வழியாக கோவைக்குள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் நுழைந்து வந்தனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ரயில் பாதை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அந்த அத்துமீறல் தடுக்கப்பட்டு வருகிறது. இதனால், கேரளாவில் இருந்து பலர் மூட்டை முடிச்சுகளுடன் வாளையார் அணையில் இறங்கி தண்ணீர் குறைவாக, சேறும் சகதியுமாக உள்ள பகுதியில் புதியதாக வழித்தடம் ஏற்படுத்தி அதன் வழியாக கோவைக்குள் நுழைந்து வருகின்றனர்.

கேரளா எல்லை பகுதியில் அணைக்குள் வருவதற்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஆட்டோவில் வரும் பொதுமக்கள், அங்கு இறங்கி, அணையை கடந்து க.க.சாவடி பகுதியை அடைகின்றனர். பின்னர், அங்கிருந்து பேருந்து மூலம் மதுக்கரை, கோவைப்புதூர் உள்பட கோவையின் பல்வேறு பகுதிக்கு செல்கின்றனர். இப்படி, அத்துமீறி நுழைந்து வருபவர்களினால் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: