பிறந்தநாள் விழாவில் மது விருந்துடன் நடனம்: அரிவாளால் கேக் வெட்டி ‘மாஸ்’ காட்டிய ரவுடி கைது: நண்பர்கள் 6 பேரும் சிக்கினர்

சென்னை: கோட்டூர்புரம் சித்ரா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தீனா (எ) தினகரன் (19), தனியார் நிறுவன ஊழியரான இவர், அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார்.  நேற்று தீனாவுக்கு பிறந்த நாள் என்பதால், நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு அவர் வசிக்கும் குடியிருப்பின் முன்பு நண்பர்களுடன் மது விருந்து மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்த நாளை கொண்டாடினார் அப்போது, ‘கோட்டூர்புரத்தில் நான்தான் மாஸ்’ என்று கூறியபடி அரிவாளால் கேக் வெட்டியுள்ளார். தொடர்ந்து, மிகுந்த சத்தத்துடன்  சினிமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கோட்டூர்புரம் போலீசாரிடம் தெரிவித்தனர்.

 போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீனா, அவரது நண்பர்களான சண்முகம் (24), நாகராஜ் (20), கைகேல் (18), விக்னேஷ் (19), மணிகண்டன் (19) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேரையும் கைது செய்தனர். தீனாவிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்போது,  ரவுடி ஒருவர் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 பிரிவுகளில் வழக்கு

கோட்டூர்புரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் தன்ராஜ் (54). இவரது கடைக்கு அடிக்கடி வரும் தீனா மற்றும் அவரது கூட்டாளிகள், பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்து செல்வதுடன், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்து வந்துள்ளனர். இதுபற்றி தன்ராஜ் கேட்டால்,  கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று கோட்டூர்புரம்  காவல் நிலையம் வந்த தன்ராஜ், இதுபற்றி புகார் அளித்தார். அதன்படி 7 பேர் மீதும் மோசடி,  கொலை மிரட்டல், ஆயுதம் காட்டி அச்சுறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: