பத்திர எழுத்தர் ஒருவர் இறந்த நிலையில் பத்திரப்பதிவுத்துறை பணியாளர் சங்க மாநில தலைவருக்கு கொரோனா

சென்னை: கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த முக்கிய  துறை தவிர மற்ற அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டாம் என அரசு கூறியது. ஆனால் பத்திரப்பதிவுத்துறை மட்டும் இயங்கும் என்று அந்த துறை–் தலைவர் நிர்மலாசாமி அறிவித்தார். பத்திரப்பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவரான வீரக்குமார்(35), என்பவருக்கு நேற்று கொரோனா உறுதியானது. அவருக்கு கொரோனா தாக்கிய தகவல் வெளியானதும், அடையாறு பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் பத்திர எழுத்தர் ஒருவர் கொரோனாவக்கு உயிரிழந்தார். காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் 2 மற்றும் 4 ஆகிய அலுவலகத்தில் பத்திர எழுத்தராக இருந்தவர் கோவிந்தராஜ். கொரோனா வைரஸ் தொற்றால் கோவிந்தராஜ், சமீபத்தில் உயிரிழந்தார்.

அதேபோல ஆற்காடு ஆவண எழுத்தர் ஸ்ரீதர் என்பவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான துறையில் பத்திரப்பதிவு இல்லாத நேரத்தில் அவர்களை பணியாற்ற வேண்டும் என்று அழைப்பதால்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்திரப்பதிவுத்துறையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: