கொரோனாவால் கொடுமை!...நோய் பயத்தால் முதியவர்களை சாலை, பேருந்து நிலையங்களில் விட்டு செல்லும் பிள்ளைகள்!

கோவை: கொரோனா வைரஸ் தொற்றிவிடும் என்ற பயத்தால் வீட்டிலிருக்கும் முதியவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி வரும் அவலம் நடந்து வருகிறது. குழந்தைகளுடனும், பேர குழந்தைகளுடனும் இறுதி வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை தவிர பெற்றோர்கள் வேறு எதையுமே எதிர்பார்ப்பதில்லை. ஆனால் வயதான பெற்றோரை சுமையாக நினைத்து வெறுத்து ஒதுக்கும் மனநிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள் என்ற தகவலால் வீட்டில் உள்ள முதியவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு இன்றைய தலைமுறையினர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். சிலரோ வீட்டில் உள்ள முதியவர்களை அழைத்து சென்று பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள பகுதிகளில் அனாதையாக விட்டு செல்கின்றனர்.

கொரோனா நோய் பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என காப்பக மேலாளர் கூறுகிறார். தொடர்ந்து, முதியவர்களை காப்பகத்தில் அனுமதிக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும் காப்பக நிர்வாகிகள் புலம்புகின்றனர். கோவையில் 4 அரசு முதியோர் காப்பகங்களும், 80க்கும் மேற்பட்ட தனியார் காப்பகங்களும் உள்ளன. இந்த காப்பகங்களில் ஆதரவற்ற முதியோர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்கிற நிலையில், சிலர் முதியவர்களை அழைத்து வந்து காப்பக வாசலில் அனாதையாக விட்டு சென்று விடுவதாகவும், காப்பக மேலாளர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார். தவம் கிடந்து பெற்ற பிள்ளையாலேயே தெருவில் விடப்படும் அவலம் மனதை ரணமாக்குவதாக பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

Related Stories: