எல்லையில் அத்துமீறும் பாக்.; ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...தேடுதல் வேட்டை தீவிரம்...!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு  படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த  தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பதிலடி தரும்வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மோதல் நடைபெறும் பகுதியில் எத்தனை  பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும், பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்களா என்று ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டனர். இது குறித்து காஷ்மீர் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் சோபியான் பகுதியில் என்கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 50 தீவிரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: