டெல்லியில் கொரோனா சோதனை 6 நாட்களில் 3 மடங்காக உயர்த்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பரிசோதனை அடுத்த 2 நாட்களில் இரு மடங்காகவும், அடுத்த 6 நாட்களில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனாவால் 39,000 பேர் பாதித்துள்ளனர். இதுவரை அங்கு 1,200க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லியில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அடுத்த 2 நாட்களில் இரு மடங்காகவும், அடுத்த 6 நாட்களில் மூன்று மடங்காகவும் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. டெல்லியில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தும் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் யார் மூலம் கொரோனா பரவுகிறது என்பதை கண்டறிய அடுத்த சில நாட்களில் அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று சுகாதார ஆய்வு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Related Stories: