அரசு மருத்துவமனையில் பணிபுரிய தேவையான டாக்டர்களை தனியார் எப்படி தேர்வு செய்ய முடியும்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: அரசு மருத்துவமனையில் பணிபுரிய தேவைப்படுபவர்களை தனியார் மனித வள நிறுவனம் எவ்வாறு தேர்வு செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு களை சமாளிக்க  சென்னையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு நியமனம் செய்து வருகிறது. சமீபத்தில் மருத்துவர்கள், முதுகலை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப்போன்று தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ அலுவலர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், டயாலிசிஸ் பணியாளர்கள், கண்காணிப்பாளர், குழு தலைவர் உள்ளிட்ட 500 மேற்பட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவை என்று தனியார் மனித வள நிறுவனம் ஒன்று சார்பில் செய்தி தாள்களில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் நல்ல சம்பளம், நல்ல பணிச் சூழல், இருப்பிடம் மற்றும் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நான்கு கைப்பேசி எண்கள் மற்றும் இணையதள முகவரி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனை பெயரில் தனியார் எப்படி ஆட்களை தேர்வு செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது : தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியாளர்களை நியமித்து வருகிறது. ஆனால் எந்த முறையில் இந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பதை அரசு தெரிவிப்பது இல்லை. இந்த விளம்பரத்தை பார்த்தால் இது போன்ற தனியார் நிறுவனங்கள் மூலமாகத்தான் அரசு பணியாளர்களை தேர்வு செய்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இதிலும் குறிப்பாக இந்த தனியார் அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. ஒரு அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் எப்படி ஆட்களை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு எப்படி விளம்பரம் வெளியிட முடியும். எனவே இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: