நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுதோறும் பரிசோதனை; டெல்லியில் கொரோனா பரிசோதனை 3 மடங்காக அதிகரிக்கப்படும்...அமித்ஷா பேட்டி

டெல்லி; டெல்லியில் கொரோனா பரிசோதனை அடுத்த 6 நாட்களுக்கு 3 மடங்காக அதிகரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20  ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,922 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 9195 பேர் உயிரிழந்த நிலையில் 1,62,379 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் தலைநகர் டெல்லி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 38,958 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1271 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,945 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில ஆளுநர், துணை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமித்ஷா தலைமையிலான அந்த ஆலோசனை கூட்டத்தில்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஷச் வரதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் அடுத்த 6 நாட்களில் கொரோனா பரிசோதனை 3 மடங்காக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் சோதனை கூடங்கள்  மூலம் சோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்படும். டெல்லி அரசுக்கு உதவும் வகையில் 5 மூத்த அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.  வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் செய்துத்தரப்படும்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுதோறும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டெல்லிக்கு உடனடியாக 500 ரயில் பெட்டிகள் அனுப்படும். கொரோனா நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள்  இல்லாததால் ரயில் பெட்டிகள் வழங்கப்படுகிறது. ரயில் பெட்டிகள் மூலம் 8000 படுக்கை வசதி டெல்லிக்கு கூடுதலாக கிடைக்கும். மருத்துவ சேவையில் சாரணர் இயக்கம், தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது  என்றார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவோம் என்றார்.

அமித்ஷா உடனான கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்தது; முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்றார்.

Related Stories: