எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா ஆய்வு மருத்துவ கழிவு சாப்பிட்ட 10 நாய்கள் பரிதாப பலி: ஊழியர்களுக்கும் வைரஸ் தாக்கியதால் பரபரப்பு; பீதி

சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வீசி எரிந்த கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் இறந்தன. மேலும் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்ைன கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவலை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று அறிவித்துள்ளது. தற்போது 50 % பணியாளர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, இந்த பல்கலைக்கழகத்தில் 100 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கை கழுவ சோப்பு, தண்ணீர், சானிடைசர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்னர் தான் காய்ச்சல் இருக்கிறதா என்பதை பார்க்க தெர்மல் ஸ்கேனர் கருவியே வழங்கப்பட்டது. அடிப்படை வசதிகளை செய்ய அரசு சார்பில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல் இந்த பல்கலைக்கழகத்தின் முதல் மாடியில் தான் கொரோனா ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நோயாளிகளும் இங்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஊழியர்கள் செல்லும் வழியில் தான் அழைத்து வரப்படுகின்றனர். தனி வழி எதுவும் ஏற்படுத்தப்படவில்ைல. இதனால், ஒருவித அச்சத்திலேயே ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவக்கழிவுகள் அனைத்தும் முறையாக அகற்றப்படுவதில்லை.

மாறாக கட்டிடத்துக்கு பின்புறம் வீசி ஏறியப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் சமீபத்தில் இறந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கழிவுகளை அகற்றும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் அஜாக்கிரதையாக கழிவு பொருட்களை அகற்றுவதாக கூறப்படுகிறது.  இதனால், கழிவுகள் பல்கலைக்கழக வளாகத்திலேயே அங்கும் இங்கும் சிதறி கிடப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கடும் அச்சத்தில் தான் அங்கு பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக பதிவாளர், உதவி பதிவாளர், துணைவேந்தர் ஆகியோர் கொரோனாவுக்கு என்ன பண்ண முடியும். பணிக்கு வர வேண்டியது தானே என்று சர்வ சாதாரணமாக கூறுவதாக ஊழியர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பயந்து ஊழியர் ஒருவர் காய்ச்சலுடன் பணிக்கு வந்துள்ளார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: