காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 40 டி.எம்.சி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவிற்கு ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: காவிரியில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான 40 டி.எம்.சி நீரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என நேற்று நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தின் 6வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இதில் நான்கு மாநிலத்தின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஜெயின் உத்தரவில், ‘‘காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டிய ஜூன் மாத தவணை 9.19 டி.எம்.சியும், அதேபோல் ஜூலை மாதத்திற்கு 32.24 டி.எம்.சி தண்ணீரும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகாவிற்கு ஆணையம் மூலம் உத்தரவிடப்படுகிறது. இதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். இது உச்ச நீதிமன்ற உத்தரவாகும் என குறிப்பிடப்படுகிறது’’ என தெரிவித்தார். ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்ட கர்நாடக பிரதிநிதிகள் நீர்வரத்தை பொறுத்து காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமாரும் கலந்துகொண்டார்.

Related Stories: