கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே வந்தால் மக்கள் தனி மையங்களில் அடைக்கப்படுவார்கள்: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோய் அதிகமாக பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து  பொதுமக்கள் வெளியே வந்தால் தனி மையங்களில் அடைக்கப்படுவார்கள் என்று  அமைச்சர் எச்சரித்துள்ளார். திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார், 700 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார். பின்னர் அந்த மண்டலத்தில் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், சென்னை மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு அலுவலர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தற்போதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மண்டலங்களுக்குள் செல்வதற்கு கூட சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று உள்ள பகுதிகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவை, தொழில் தேவைக்காக மட்டுமே பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு செய்தி, ஒரு வருந்தத்தக்க சம்பவமாகும். மக்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. அவரது மறைவு மிகவும் கவலையும், வருத்தத்தையும் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். அதேபோன்று, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் உணவு துறை அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “கொரோனா நோய் வருவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பொருட்கள் வாங்க வெளியே வரும்போது, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் அதிகமாக பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே வருபவர்கள் தனியாக மையங்களில் தங்கவைக்கப்படுவதுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Related Stories: