கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாவதால் அச்சம்; தலைநகரை தாண்டினால் தலை தப்பும் வெளியேற துடிக்கும் சென்னைவாசிகள்: வாழ வந்தவர்கள், உயிர் பிழைக்க ஓடும் பரிதாபம்

சென்னை: பட்டணம் போனா பிழைச்சுக்கலாம்… அன்று முதல் இன்று வரை மாறாத நம்பிக்கை வாசகம் இது. ‘படிச்சுட்டு வேலையில்லாம எதுக்கு சுத்தற… சென்னைக்கு போனா ஏதாவது ஒரு வேலை கிடைக்கும். படிக்கலேன்னா கூட பட்டணத்துல எப்படியாவது பிழைச்சுக்கலாம்’ என்ற நம்பிக்கையோடு புறப்பட்டவர்கள் ஏராளம். உண்மையிலேயே, இவ்வாறு வந்தவர்களுக்கு சென்னை பட்டணம் வாழ்வளித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், பிழைப்புத்தேடி வந்தவர்கள், இன்று உயிர் பிழைக்க வேண்டுமானால் இங்கிருந்து வெளியேறியே ஆக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மனநிலையை மாற்றி விட்டது. தலைநகர் சென்னை.

இதற்கு காரணம் கொரோனா. கொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தமிழகத்தில் பரவல் தீவிரம் காட்ட தொடங்கியது. அதிலும், கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்த பிறகு, சென்னையில் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை உச்சபட்ச அளவை எட்டி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிய தொடங்கி விட்டன. இதனால், ஏறக்குறைய சீனாவின் வுகான் மாகாணத்தில் இருக்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்கு சென்னை மக்கள் பலர் பீதி அடையத் துவங்கி விட்டனர்.

சென்னையில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கே சென்று விடலாமா என்ற எண்ணம் பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. குறிப்பாக, தென் மாவட்ட மக்கள் மற்றும் பரம்பரை பரம்பரையாக இங்கு வசித்து வந்தவர்கள் பலர் சென்னையை விட்டு வெளியேற திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சிலர் கூறியதாவது: வேலை தேடி சென்னைக்கு வந்தோம். சொந்த ஊரை மறந்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம். இதுவே நிரந்தர வசிப்பிடம் ஆகிவிட்டது. வருங்கால சந்ததிகளுக்கும் சென்னைதான் வாழ்வளிக்கும் எனக் கருதி, இங்கு நிரந்தரமாக தங்க அடுக்குமாடி குடியிருப்புகளை கூட சிலர் வாங்கி விட்டனர்.

ஆனால், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அச்சம் அதிகரித்து வருகிறது. வெளியில் செல்லவே தயக்கமாக உள்ளது. அரசு கூறிய முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்துதான் வருகிறோம். இருப்பினும், அச்சம் விடவில்லை. கொரோனா பரவல் தமிழகத்தில் துவங்கியபோது, ‘அந்த ஏரியாவில் கொரோனாவாம். தெருவை அடைச்சு வச்சுருக்காங்க’ என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது பக்கத்து தெருவிலும், ஒரு சில தெருக்கள் தள்ளியும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உள்ளனர் என்பதை கேட்கும்போது பதைபதைப்பாக உள்ளது.

சென்னையை விட்டுச் சென்று விடலாமா என்றுதான் தோன்றுகிறது. குறைந்த பட்சம் புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து விடலாமா என்று கருதுகிறோம் என தெரிவித்தனர். ‘சிட்டிக்குள்ள வீடு வாங்காம, இப்படி காட்டுக்குள்ள இடத்தை வாங்கி வச்சுருக்கீங்களே… அங்கிருந்து எப்படி வேலைக்கு வந்துட்டு போவீங்க.. என்று புறநகர்களில் வீடு, இடம் வாங்கியவர்களை பார்த்து கேட்டவர்கள், இன்று புறநகர்களை நோக்கி படையெடுக்க ஆயத்தமாகி விட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்ல, வடசென்னையில் பகுதிகளில் உள்ள, பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் மக்களைக்கூட கொரோனா பயம் காட்டி விட்டது.

அவர்களும் புறநகர்களுக்கு போவது பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டனர். கொரோனா பரவலில் சமூக பரவல் நிலையை சென்னை அடைந்துள்ளதா? அதற்கும் அடுத்த நிலைக்கு சென்று விடுமா என்ற சந்தேகமும் அச்சமும் பலருக்கு ஏற்பட்டு விட்டது. அன்று, ‘பட்டணம் போனா பிழைச்சுக்கலாம்‘ என்றிருந்த மக்களின் நினைப்பு, இன்று, ‘பட்டணத்தை விட்டு போனா பிழைச்சுக்கலாம்’ என்று மாறும் அளவுக்கு, சென்னை மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு போய் நிறுத்தி விட்டது கொரோனா. அதேநேரத்தில், சென்னையில இருந்து வந்து எங்களுக்கும் பரப்பிடாதீங்க என அலறுகின்றனர், பாதுகாப்பாக வாழும் தமிழக கிராம மக்கள்.

கொரோனா பரவலில் 4 நிலைகள்

முதல் நிலை, கொரோனா பரவல் உள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு ஏற்படும் நோய் தொற்று.

2ம் நிலை, கொரோனாவை சுமந்து வந்தவர்கள், தங்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு பரப்புவது. இந்த நிலையில், பரவலை எளிதாக கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும்.

3ம் நிலையில், தொற்று யாரிடம் இருந்து யாருக்கு எப்படி பரவுகிறது என்று கண்டறிய முடியாது. சமூக பரவலாக தீவிரம் அடையும். இந்த நிலைக்கு இந்தியா வந்து விட்டது என மருத்துவ நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

4ம் நிலையை முதன் முதலாக எட்டியது சீனாதான். இந்த நிலையை எட்டிவிட்டால், கொத்துக்ெகாத்தாக மடியும் அவலம் ஏற்படும்.

வர விரும்பாத வெளிமாநில தொழிலாளர்கள்  

ஊரடங்கால் வேலை இழந்த வெளிமாநில தொழிலாளர்கள், பிழைக்க வந்த இடத்தில் வசிக்க வழியின்றி, பசியால் தவித்தனர். இனி இங்கு இருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வந்த அவர்கள், மத்திய, மாநில அரசுகள் எந்த ஏற்பாடும் செய்யாததால் மனம் வெறுத்து, பல ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக செல்ல தொடங்கி விட்டனர். சிறப்பு ரயிலில் சென்ற சிலர் உயிரிழந்தனர். இன்னும் சில வடமாநில தொழிலாளர்கள் இங்கேயே உள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘சென்னையில் கொரோனா பரவுவதை பார்த்தால் பயமாக உள்ளது. எப்படியாவது சொந்த மாநிலம் சென்று விட வேண்டும். இனி இங்கு வருவது பற்றி யோசிக்கவே முடியாது’’ என்றனர்.

Related Stories: