புதுகை சிறுமி நரபலி விவகாரம்: பெண் மந்திரவாதி சிறையில் அடைப்பு: மாந்திரீக பொருட்கள், சிம்கார்டுகள் பறிமுதல்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பெண் மந்திரவாதி சிறையில் அடைக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவரது முதல் மனைவி இந்திரா. அவருக்கு வித்யா (14) உள்பட 4 பிள்ளைகளும், 2வது மனைவி மூக்காயி (45)க்கு 2 குழந்தைகளும் உண்டு. இவர்களில் முதல் மனைவி மகள் வித்யா 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 18ம் தேதி மதியம் வீட்டின் அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்கு வித்யா தண்ணீர் பிடிக்க சென்றபோது, பன்னீர்செல்வம், மூக்காயி, உறவினர் குமார் ஆகியோர் சேர்ந்து நரபலி கொடுத்தனர்.

இந்த சம்பவத்தில், தந்தை பன்னீர்செல்வம்,  உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு முக்கிய  குற்றவாளியான மூக்காயி மர்மமான முறையில் இறந்தார். இதன்பின், மந்திரவாதி வசந்தி, அவரது உதவியாளர் முருகாயி ஆகியோரை பிடித்து  போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கடந்த 5 நாட்களாக விசாரணை  நடத்தி வந்தனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு கந்தர்வக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முனிக்குமார் முன்னிலையில்  வசந்தியை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ‘வசியம் செய்வது, பில்லி, சூனியம் வைப்பது போன்ற  செயல்களில் வசந்தி ஈடுபட்டு வந்துள்ளார். புதுகையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் ஒரு கார், செல்போன், சிம்  கார்டுகள், மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய நூல் சுற்றப்பட்ட தேங்காய்,  கருப்பு மை டப்பா 5, மாந்திரீக புத்தகம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உதவியாளர் முருகாயியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தனர்.

Related Stories: