பள்ளிக்கரணையில் ஓட்டை தொட்டியை மாற்றாத அதிகாரிகள்

வேளச்சேரி: பள்ளிக்கரணையில் குடிநீர் தொட்டியில் ஓட்டை விழுந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இத்தொட்டியை மாற்ற பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி, 14-வது மண்டலம், 190-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, தெரேசா தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக ஒரு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. அந்தத் தொட்டியில் நிரப்பப்படும் குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

 இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அத்தொட்டியின் பல்வேறு பகுதிகளில் ஓட்டை விழுந்தது. இதனால் அதில் நிரப்பப்படும் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர குடிநீர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை அந்த தொட்டியை மாற்றுவதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, ஆங்காங்கே குடிநீர் பிரச்னை நிலவி வரும் நிலையில், இங்குள்ள ஓட்டை தொட்டியை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: