லடாக் எல்லை விவகாரத்தில் அமைதி தீர்வுக்கு சீனா சம்மதம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: லடாக் எல்லை பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வு காண சீனா ஒப்பு கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கின் பான்காங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் பெக் ஓல்டி எல்லை பகுதிகளில் சீனப் படைகள் ஊடுருவியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவமும் அங்கு வீரர்களை குவித்தது. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்தன.அதன்படி, நேற்று முன்தினம் லடாக்கில் சீனாவின் எல்லைக்குட்பட்ட மால்டோ பகுதியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா தரப்பில் லே 14வது பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும், சீன தரப்பில் திபெத்தின் ராணுவத் தளபதியும் பங்கேற்றனர்.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், இப்பிரச்னையில் விரைவில் சுமூகமான தீர்வு காண இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இந்தியா, சீனா தலைவர்களிடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் எல்லைப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையேயான நட்புறவு தொடங்கி 70வது ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவில் கொண்டு, ராணுவ தரப்பிலும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்வு காணவும் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: