மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்: 16 பேர் கைது

திருப்போரூர்: இலவச மின்சாரம் ரத்து செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். புதிய மின்சார கொள்கையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய அரசின் மின் கொள்கையை கண்டித்து அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் திருப்போரூர் பகுதியில் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காக பந்தல் அமைத்து நாற்காலிகளை போடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த திருப்போரூர் போலீசார், பந்தல் போட்டு உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என கூறி 10 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். திருக்கழுக்குன்றம்: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தலூர் கிராமத்தில் சங்க ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க  முயன்றனர். அப்போது, விவசாயிகள் 6 பேரை திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: