சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், பொதுமக்களுக்கு கடந்த மே 4ம் தேதியில் இருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவு குறைவாக இருந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதமாக தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது தற்போது 1000ஐ தாண்டி விட்டது. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தினசரி நோய் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியாக ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். மேலும், 15 மண்டலங்களுக்கு நோயாளிகளை கண்டறியவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை கவனிக்க ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் தனித்தனி குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு மாறாக, தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள், கொரோனா தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துகிறது. அதை கையாளும் பணிகளை செயல்படுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மண்டல வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களை ஒழுங்கிணைக்கவும், நிவாரண பணிகளை வழிநடத்தவும் 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் 3 மண்டலங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

அதன்படி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாநகராட்சியில் உள்ள 3, 4, 5 (மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம்) ஆகிய மண்டலங்களையும், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மண்டலம் 13, 14, 15 (அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மண்டலம் 8, 9, 10 (அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மண்டலம் 1, 2, 6 (திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர்), போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 7, 11, 12 (அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர்) ஆகிய மண்டலங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறைவதற்கு பதில் அதிகரிப்பது ஏன்?

வழக்கமாக, கொரோனா வைரசை பொறுத்தவரை ஒரு பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, அதை தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். ஆனால், சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே நாளுக்கு நாள் கொரோனாவின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பலி எண்ணிக்கையும் சென்னையில் குறைந்தது 10 பேர் என்ற நிலை உள்ளது. இதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 4 பெரிய அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை நிரம்பி விட்டதால், புதிய நோயாளிகளை வீட்டில் இருந்தபடி அல்லது ஏதாவது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களாவது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா வைரசை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதே சென்னை மக்களின் கேள்வியாக உள்ளது.

Related Stories: