கல்வித்துறையில் சீரழிவை நோக்கி தமிழகம் துணை வேந்தர் இல்லாமல் சென்னை பல்கலை ஸ்தம்பிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக திகழ்ந்தது.ஆனால் இன்று கல்வித்துறை அனைத்து நிலைகளிலும் சீரழிவை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை பார்க்கிற போது மிகுந்த வேதனை தான் மிஞ்சுகிறது. அதற்கு சான்றாக விளங்கி வருவது சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகள்தான்.  சென்னை பல்கலை துணை வேந்தர் இல்லாமல் முற்றிலும் ஸ்தம்பித்து நிற்கிறது. தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் 60 சதவிகித ஆசிரியர் பணியிடங்களும், 50 சதவிகித ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதுபோன்ற குறைபாடுகளுக்கு தீர்வு காண ஏற்கனவே இருந்த துணைவேந்தர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ளது போன்ற ஊதியம் மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதி முறையை பல்கலைக்கழகங்களிலும் தமிழக அரசே மேற்கொள்வது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கும்.  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமலும், குறைபாடுகளை களையாமலும் போனால், 2021ம் ஆண்டில் பெற வேண்டிய நிதியை சென்னை பல்கலை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.  துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபரை நியமிக்கும் பொறுப்பு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநருக்கு உண்டு. எனவே, சென்னை பல்கலைக் கழத்துக்கு விரைந்து  துணைவேந்தரை நியமிக்க வேண்டும்.

Related Stories: