76 வயதிலும் ஃபிட் உடம்பு! அசத்தும் பாடகர் பி.ஜெயச்சந்திரன்

நன்றி குங்குமம்

இசை ரசிகர்களை தன் காந்தக் குரலால் வசியம் செய்தவர்... செய்பவர் பாடகர் பி.ஜெயச்சந்திரன். ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்...’, ‘வசந்த காலங்கள்... இசைந்து பாடுங்கள்...’, ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு...’, ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...’, ‘மாஞ்சோலை கிளிதானோ...’, ‘கொடியிலே மல்லிகைப்பூ...’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே...’, ‘கட்டாளம் காட்டுவழி...’ உட்பட மனதை ரம்மியமாக்கும் பாடல்களைப் பாடியவர். தமிழ், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை செய்தவர் ஜெயச்சந்திரன். தன் பூர்வீக தேசமான கேரளாவில் செட்டில் ஆகிவிட்டவருக்கு இப்போது வயது 76. இந்த வயதிலும் ஃபிட்னஸ் புலியாக கெத்து காட்டுகிறார் ஜெயச்சந்திரன். ‘‘நானும் என் மகளும் கேரளாவுல இருக்கோம். பையன் சென்னைல சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றார். இப்பவும் மலையாளத்துல பாடிட்டிருக்கேன்.

லாக் டவுனால வெளிய எங்கயும் போகமுடியல. மேடைக் கச்சேரி, கன்சர்ட்னு எதுவும் நடக்கல. இந்த சூழல்ல வீட்டுக்கு வந்த என் நண்பர் என்னைப் பார்த்துட்டு தன் செல்போன்ல படம் எடுத்து நெட்ல தட்டிவிட்டார்... அது சோஷியல் மீடியாவுல வைரல் ஆகிடுச்சு!’’புன்னகைக்கும் ஜெயச்சந்திரன், அப்படத்தில் இருப்பதுபோல் நேரில் மல்யுத்த வீரராக, தான் காட்சியளிக்க மாட்டேன் என்கிறார். ‘‘சும்மா தமாஷுக்கு அப்படி போஸ் கொடுத்தேன்! ஆக்சுவலா கடுமையான உடற்பயிற்சிகள், ஜிம் போறது... இப்படி எதுவும் செய்யறதில்ல. ஆனா, வருஷக்கணக்கா சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்துட்டு இருக்கேன். புஷ்அப்ஸ் பண்ணுவேன். லிஃப்ட் பயன்படுத்துறதில்ல. ஒருவேளை விடாம இதெல்லாம் செய்யறது என் உடம்பை செதுக்கியிருக்கோ என்னவோ? மத்தபடி டயட்னு எதையும் ஃபாலோ பண்ணாம, அதேநேரம் சாப்பாட்டையும் கண்ட்ரோல்ல வைச்சிருக்கேன். உண்மையை சொல்லணும்னா இசைதான் என் ஆரோக்கியத்துக்கு காரணம்!’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ஜெயச்சந்திரன்!

Related Stories: