கொரோனா ஊரடங்கால் திருச்செந்தூர், கழுகுமலை கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து

திருச்செந்தூர்: கொரோனா ஊரடங்கால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திகழ்கிறது. இக்கோயிலில் தைப்பூசம், கந்தசஷ்டி என வருடம் முழுவதும் திருவிழா களைகட்டும். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர். கொரோனா பரவலால் கடந்த மார்ச் 20ம்தேதி முதல் கோயில் மூடப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆகம விதிப்படி கோயிலில் 9 கால பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று (4ம்தேதி) வைகாசி விசாகம் ஆகும். முருகக்கடவுள் அவதாரம் செய்த நாள். ஆண்டு முழுவதும் முருகனை வழிபட்ட பலன் வைகாசி விசாகம் நாளன்று வழிபட்டால் கிடைக்கும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் விசாகத்தன்று திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.

தற்போது கொரோனா ஊரடங்கால் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனினும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதேபோல் தென்னகத்து பழனி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலிலும் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல் ஐந்து வேளை பூஜைகளும், அபிஷேகமும் மற்றும் தீபாராதனைகளும் கோயிலில் உள்ள பட்டர்களால் ஆகம விதிமுறைப்படி நடைபெறும் என எட்டயபுரம் மன்னர் பரம்பரை அறங்காவலர் தங்கசுவாமி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளனர்.

Related Stories: