தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில், மசூதி, சர்ச் திறப்பு எப்போது? சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக பல்வேறு சமய தலைவர்களுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  இதில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாபீத் செயலாளர்கள் சுவாமி சுகதேவானந்தா, சுவாமி பத்மாஷதானந்தா, சத்யஜெனாந்தா, பிரம்மகுமாரி அமைப்பு சார்பில் ஜான்சி, சர்வதேச கிருஷ்ண பக்தி குழு இயக்கம் (இஸ்கான்) சார்பில் திருமால் ராவ், உத்தண்டி சித்தானந்தா ஆசிரமத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஈஸ்வரானந்தா, தமிழ்நாடு சுன்னத் முஸ்லிம் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழ்நாடு ஷியா முஸ்லிம் தலைமை காஜி குலாம் முகமது மஹாதிகான், அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் பிரசிடென்ட் அபுபக்கர், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல், சிஎஸ்ஐ சென்னை டயோசிஸ் துணை தலைவர்கள் பால் வில்லியம்ஸ், மானுவல் டைட்டஸ்,

சென்னை ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி, குருநானக் சதசங்க் சபா பொதுச்செயலாளர் பால்பீர் சிங், புளியந்தோப்பு ஜெயின் சங்கத்தின் செயலாளர் அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வழிபாட்டு தலங்களை மத்திய அரசு அறிவித்தது போன்று 8ம் தேதி முதல் திறக்கவேண்டும் என்று சமய தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. அப்போது அரசு தரப்பில், வழிபாட்டு தலங்களில் நோய் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை கண்டிப்பான முறையில் பின்பற்றவேண்டும் என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.  

முதல்வரிடம் கலந்து ஆலோசித்து இதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அனைத்து சமய தலைவர்களும் வழிபாட்டு தலங்களை திறக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், வரும் 8ம் தேதி வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: