19ம் தேதி தேர்தலில் அதிக இடங்களை பிடித்து மாநிலங்களவையில் பாஜ பெரும்பான்மை பெறுகிறது: தோள் கொடுக்கும் தோழமை கட்சிகள்

புதுடெல்லி: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள 24 மாநிலங்களவை எம்பி.களுக்கான தேர்தலில், அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜ எளிதாக வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.  இந்தாண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் காலியான 55 எம்பி. பதவி இடங்களில் 37 இடங்கள், கடந்த மார்ச் மாதம் போட்டியின்றி நிரப்பப்பட்டன. மீதமுள்ள 18 இடங்களுக்கு மார்ச் 26ம் தேதி தேர்தல் நடத்த இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் மாதம் நிரப்பப்படாத 18 இடங்களுடன், புதிதாக காலியாகி உள்ள 6 இடங்கள் என, மொத்தம் 24 இடங்களுக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் ஆந்திரா, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 3, ஜார்கண்டில் 2, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சலில் தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். புதிய 6 காலி இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 9ம் தேதி கடைசி, திரும்ப பெற 12ம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் தற்போது பாஜ.வுக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர்.  பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, பாஜ.வின் தோழமை கட்சிகளான அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை 27 ஆக உள்ளது.

அதே நேரம், எதிர்க்கட்சிகள் வரிசையில் காங்கிரசுக்கு 39, திமுக.வுக்கு 5, தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவுக்கு தலா 3 என மற்ற மாநில கட்சிகளின் சார்பில் 69 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, 3 சுயேச்சைகள், ஒரு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர், மதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு உறுப்பினரை கொண்டுள்ளன.  வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் 24 இடங்களில், மபி.யில் 3 இடங்களில் 2, ராஜஸ்தான், ஜார்கண்டில் தலா 1, கர்நாடகாவில் 2, அருணாச்சல், மிசோரமில் தலா ஒரு இடத்தை பாஜ கைப்பற்றும். ஆந்திராவில் 5 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களை வெல்லும்.  மபி.யை பொருத்தவரை, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க உதவிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் சுமர் சிங் சோலங்கி என்பவரும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தரப்பில் திக் விஜய் சிங், பூல் சிங் பரையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு 3 இடங்களுக்கு 4 பேர் களம் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும். அதே போல், குஜராத்தில் எம்எல்ஏ.க்களின் கணக்கை வைத்து பார்த்தால் காங்கிரஸ், பாஜ தலா இரண்டு சீட்களை கைப்பற்றும். படேல் சமூகத்தினரின் ஆதரவை பெற காங்கிரஸ் எதிர்ப்பு அணியை சேர்ந்த நர்ஹரி அமீன் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. மபி, குஜராத் மாநிலங்களில் பாஜ-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்பதால் கட்சிகள் பேரத்தை தொடங்கி உள்ளன. அங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு வலை வீசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியின் மூலம் வரும் 2021-க்குள் மாநிலங்களவையில் பாஜ.வின் பலம் 123 ஆக உயரக் கூடும். இதனால், நிறைவேற்றப்படாமல் உள்ள மசோதாக்களை புதிய உறுப்பினர்களின் ஆதரவுடன் எளிதில் பாஜ நிறைவேற்றும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: