மேற்கு தாம்பரம் மார்க்கெட்டில் 2 நாட்களுக்கு ஒரு முறை கடைகள் திறக்க அனுமதி

தாம்பரம்: கொரோனா பரவலை தடுக்க மேற்கு தாம்பரம் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு, மேற்கு தாம்பரம் காந்தி சாலையில் உள்ள பள்ளியில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள கடைகளை திறக்க வேண்டும் என தாம்பரம் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், காய்கறி மார்கெட்டை தவிர்த்து மற்ற கடைகளை 2 நாட்களுக்கு ஒருமுறை திறக்க பரிந்துரைக்கப்பட்டது.

இதற்காக தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் நேற்று மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நீலம் மற்றும் பச்சை வண்ண நிறங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினர். அதில் நீல வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் நாளில் பச்சை வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கடைகள் மூட வேண்டும். பச்சை வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் நாளில் நீல வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கடைகள் மூட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் நேற்று வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் ஊரடங்கு விதிகளை மீறாமல் செயல்பட அறிவுறுத்தியதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Related Stories: