சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கவர்னருடன் முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு: தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

சென்னை: கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், தமிழக கவர்னரை முதல்வர் எடப்பாடி நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்து வந்தாலும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் தினசரி நோய் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் மட்டும் 964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு வாரமாக நோய் பாதிப்பு தினசரி 500ஐ தாண்டியது. தற்போது கடந்த 3 நாட்களாக 1000த்தை தாண்டி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. தமிழக கவர்னரை முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக, சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஏன் என்பது குறித்தும் கவர்னரிடம் முதல்வர் எடுத்துக் கூறினார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தேவையான படுக்கைகள் தயாராக உள்ளது, மருந்துகள் கையிருப்பு உள்ளது குறித்தும் கவர்னரிடம் விளக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதா என்று கவர்னர் முதல்வரிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக அளவில் டெஸ்ட் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசுக்கு அப்போது பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், சென்னை மருத்துவமனையில் பெட் தயாராக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 ஆயிரம் பெட் தயாராக வைக்கப்பட்டுள்ளது. 5 பேர் மட்டுமே வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 56 சதவீதமாக உள்ளது. இறப்பு வீதம் 0.8 சதவீதமாக உள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். இதைக் கேட்டுக் கொண்ட தமிழக கவர்னர், அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தாக கூறப்படுகிறது. தமிழக முதல்வரின் விளக்கத்தை, கவர்னர் பன்வாரிலால் அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிப்பார்.

Related Stories: