நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் காய்கனி லாரிகள் பேருந்துகள் சங்கமத்தால் நெரிசல்: வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பாதிப்பு

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், அங்கு தற்காலிகமாக செயல்படும் காய்கனி மார்க்கெட்டிற்கு வந்த லாரி உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் குறைந்தளவே பயணிகள் வந்ததால் பஸ் நிலைய வியாபாரிகளும் கடைகளை திறக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் டவுன் நயினார்குளம் அருகே செ யல்பட்ட மொத்த காய்கனி விற்பனை சந்தை, புதிய பஸ் நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 65 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாத நிலையில் தினமும் 200க்கும் மேற்பட்ட கனரக மற்றும் சிறிய லாரிகள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டு காய்கனி மூட்டைகளை தடையின்றி ஏற்றி, இறக்கி வந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பல்லாரி, உருளைக்கிழங்குகளும் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டு பஸ் நிலைய பிளாட்பார பகுதிகளில் அடுக்கி வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் வரத் தொடங்கின. குமரி மாவட்டம் தவிர தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முக்கிய வழித்தடங்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கமாக நிறுத்தப்படும் பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டன. அதேபோல் மாநகர பகுதியில் இயக்கப்படும் நகர பஸ்கள், 4வது பிளாட்பார பகுதியில் நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள பிளாட்பார பகுதிகளில் சரக்குகளுடன் கூடிய லாரிகளும் நின்றிருந்தன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் சில இடங்களில் அழுகிய காய்கனிகளும் கிடந்ததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. 2வது மற்றும் 3வது பிளாட்பாரம் அமைந்துள்ள மைய பகுதிக்கு வரும் பஸ்கள் உள்புறம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டன. அப்பகுதியில் நிறுத்தியிருந்த லாரிகளை நீண்ட நேரத்திற்கு பின் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டன.

மதியத்திற்கு பிறகு கூடுதல் லாரிகள், பஸ் நிலையத்திற்குள் வழக்கம்போல் வந்ததால் அப்பகுதியில் மேலும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில் காய்கனி சந்தையும், பஸ் போக்குவரத்தும் தொடர்ந்து செயல்படுவது சாத்தியமில்லை. எனவே காய்கனி சந்தையை இடமாற்றம் செய்வதே வியாபாரிகளுக்கும், பஸ் ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும், என்றனர்.

Related Stories: