×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் பஸ், ஆட்டோ, டாக்சிகள் ஓடின: பொது போக்குவரத்தால் மக்கள் நிம்மதி

சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்து, ஆட்டோ, டாக்சிகள் இயங்கின. 68 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்து தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி (நேற்று முன்தினம்) வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கின்போது அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டாலும் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக மத்திய, மாநில அரசு ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்கை நீட்டித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் கொரோனா அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஜூன் 1ம் தேதி (நேற்று) முதல் பொது போக்குவரத்தான பேருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் மட்டும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. பேருந்தின் மொத்த இருக்கைகளில், 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் நேற்று காலை முதல் சென்னை மண்டலம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க தொடங்கின. காலை முதல் பயணிகள் பலர் ஆர்வத்துடன் பயணித்தனர். முகக்கவசம் இல்லாத பயணிகளை பேருந்துக்குள் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் நேற்றுதான் கடந்த 68 நாட்களுக்கு பிறகு ஆட்டோ, டாக்சிகளும் இயங்க அனுமதிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இவற்றை இயக்கினர். விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உரிய விதிகளுக்குட்பட்டு நேற்று காலை முதல் சென்னையில் இந்த வாகனங்கள் இயக்கப்பட்டன. பலர் தங்கள் அவசர தேவைக்காக புக் பண்ணி கால் டாக்சிகளை பயன்படுத்தினர். அதேபோன்று நேற்று முதல் தமிழகத்தில் ரயில் சேவையும் தொடங்கியது. குறிப்பிட்ட 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு ரயில்வே வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. அதன் அடிப்படையில், அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை முதல் கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால் பல பயணிகள் ரயிலில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

68 நாட்களுக்கு பிறகு...
தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், சென்னையில் கொரோனா தொற்று அதிகளவில் இருந்ததால் பொது போக்குவரத்தான பஸ், ஆட்டோ, டாக்சி ஆகியவற்றுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரம் மற்ற மாவட்டங்களில் ஆட்டோ, டாக்சிக்கு ஏற்கனவே அனுமதி இருந்தது. ஆனால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்சிகளை இயக்க மட்டும் நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 68 நாட்களுக்கு பிறகு ஆட்டோ, டாக்சி சென்னையில் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும், வழக்கமான கட்டணத்துக்கு பதில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் அளித்தனர். சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.



Tags : Tamil Nadu ,districts ,Chennai , Buses, auto,taxis ,Nadu except , 4 districts including Chennai, public transport
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...