பத்திரப்பதிவு குறைந்ததன் எதிரொலி பதிவுத்துறைக்கு ரூ.60 கோடி மட்டுமே கிடைத்தது: பதிவுக்கட்டணம், முத்திரைத்தீர்வை கட்டணத்தை உயர்த்த ஆலோசனை

சென்னை: கொரோனா ஊரடங்கால் பத்திரப்பதிவு குறைந்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க பதிவு கட்டணம் மற்றும் தீர்வைக் கட்டணத்தை உயர்த்த பதிவுத் துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  தமிழகம் முழுவதும்  கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் அரசுக்கு வருவாய் அள்ளித்தரும் பத்திரப் பதிவுத்துறையின் வருமானம் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. கடந்த 2 மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் பதிவு செய்யபட்டிருக்க வேண்டும். ஆனால் கால்வாசிக்கும் குறைவாகவே பதிவு நடந்துள்ளது. அதேபோன்று சங்கம், சிட்பண்ட் பதிவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் பதிவுத்துறைக்கு ₹60  கோடிக்கு குறைவாக வருவாய் வந்துள்ளது. குறிப்பாக, தற்போது வரை 13,000 பத்திரங்கள் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் ₹2500 கோடி வரை பதிவுத் துறைக்கு வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக குறைவாகவே பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் அரசுக்கு வருவாய் இழப்பை சமாளிக்க பதிவு கட்டணம் மற்றும் முத்திரை தீர்வை கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பதிவுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  இது குறித்து பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் பத்திரப்பதிவு அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, நடப்பாண்டில் ₹5000 கோடியாவது வருவாய் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையில் பதிவுக்கட்டணம் முத்திரைத்தீர்வை கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றார்.

Related Stories: