23 ஆயிரம் பேர் பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக மாறியது கொரோனா: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது 23 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 900 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது : கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை பயன்படுத்தி கொரோனா பரவலை  கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தி இருந்தால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து இருக்கும். ஆனால் தமிழகத்தில் நாளுக்கு கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட 3 மற்றும் 4வது கட்ட ஊரடங்கில் கொரோனா மிக வேகமாக பரவியுள்ளது. மக்கள் வெளியில் நடமாட தொடங்கிய காலத்தில் இருந்து கொரோனா அதிகம் பேருக்கு பரவியுள்ளது. இது சமூக பரவல்தான். முதல் மற்றும் 2து கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்த போது அதிக பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து இருந்தால் சமூக பரவலை தடுத்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாத காரணத்தால் தான் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே தமிழகத்தில் சமூக பரவல் உள்ளது என்பதை அரசு ஒத்துக் கொள்ள வேண்டும். மேலும் சமூக பரவலை கட்டுப்படும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: