மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்த வழக்கில் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்: சென்னை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப் பட்டது. இந்த இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவும், புகார்தாரர் கல்யாண சுந்தரத்தின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தன்றே அவரது ஜாமீன் மனுவை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று காலை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். இதையடுத்து, அவர் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது. ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம், பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஆர்.எஸ்.பாரதிக்கு ரூ.10000த்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு ஒரு நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

Related Stories: