போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் உடனே பணியில் சேர வேண்டும்: பதிவுத்துறை உத்தரவு

சென்னை: பொதுப் போக்குவரத்துக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் உடனே பணிக்கு வர வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுப்போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சார்பதிவாளர்கள், அமைச்சு மற்றும் அடிப்படை பணியாளர்கள்  தங்கள் வீட்டின் அருகில் உள்ள அலுவலகங்களிலேயே பணி புரிய அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர மாநிலம் முழுவதும் 50 சதவீத பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பதிவுத்துறை சார்பில் சார் பதிவாளர்கள் தங்களது அசல் பணியிடங்களில் பணிபுரிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சார்பதிவாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிய ஆணையிடப்பட்டிருந்தது. தற்போது தமிழக முதல்வரின் அறிவிப்புக்கிணங்க பொதுப் போக்குவரத்துக்கு இன்று முதல் அனுமதிக்கப்படுவதால் ஏற்கனவே பிறப்பித்த ஆணை இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் பணியாளர்கள் பணியிடத்தில் பணியேற்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: