அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வது எப்போது?.. ஒப்பந்த நிறுவனங்கள் வேலைசெய்ய மறுப்பு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வதில் அலட்சியம் காட்டி வருவதால் ஒப்பந்த நிறுவனங்கள் வேலை செய்ய தயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் கட்டிடங்களின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ500 கோடி வரை பராமரிப்பு பணிக்கு ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் பராமரிப்பு பணிக்கு நிதி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ரூ50 லட்சமும், ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ90 லட்சமும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ60 லட்சம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ரூ40 லட்சம் என பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் தற்போது மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பராமரிப்பு நிதியை கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.  இதற்காக, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அதாவது ஸ்டான்லி மருத்துவமனையில் பணி செய்ததற்காக ரூ5 கோடியும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணி செய்வதற்காக இரண்டு கோடியும் ஓமந்தூரார் மருத்துவமனையில் பணி செய்ததற்காக ரூ2 கோடி,

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இப்பணிகளை செய்ததற்காக ரூ3 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  இதனால் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வேலை செய்த பணிக்கு நிதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,  ‘மருத்துவ கட்டுமான பணிக்கு அரசு சார்பில் வழக்கமாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை தராமல் இந்தாண்டு குறைவாக தந்துள்ளனர். இருப்பினும் கூடுதலாக நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த பணம் கிடைத்தால் மட்டுமே ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணம் தர முடியும்’  என்றார். இந்நிலையில் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கும் பணியை ஒப்பந்த நிறுவனங்கள் செய்ய தயங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: