கடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி

கடையம்: கடையம் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் வனசரகத்திற்கு உட்பட்ட கோவிந்தப்பேரி, நீலமேகபுரம், அழகப்பபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு மற்றும் சிவசைலம் ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில்  கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததுடன் வீட்டு சமையல் அறையில் புகுந்தும் தேங்காய்களை ருசிபார்த்து அட்டகாசம் செய்து வந்தது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சிவசைலம் கிராமத்தில் உள்ள கடையம் வனசரக அலுவலகத்தில் கரடியை  பிடிக்க நேற்றிரவு கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சுமார் 12 வயது கரடி சிக்கியது தெரியவந்தது. தகவல் அறிந்து கடையம் வனசரகர் நெல்லைநாயகம் தலைமையில் வனவர் முருகசாமி மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ஆகியோர் கூண்டில் சிக்கிய கரடியை ேஜசிபி மூலம் டிராக்டரில் ஏற்றினர்.

பின்னர் கரடியை முண்டன்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் கொண்டுசென்றுவிட நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்தசில மாதங்களாக அட்டகாசம் செய்துவந்த கரடி தற்போது கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: