கோவளம் முகத்துவாரத்தில் 18 கோடியில் தூர்வாரும் பணி

சென்னை: கோவளம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணி 18 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கிராமத்தில் அழகிய வளைவான கடற்கரை உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வாரந்தோறும் இங்கு வந்து பொழுதை கழிப்பர். மேலும், இங்குள்ள மீனவர் பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களை வாங்கவும் பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடல் சீற்றத்தின் காரணமாக அடிக்கடி மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வசிக்க முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, கோவளம் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து மீன் வளத்துறை சார்பில் கோவளம் கடற்கரையில் கடல் நீர் உள்ளே புகாதவாறு கருங்கற்களை கொட்டி, தற்காலிக சுவர் ஏற்படுத்துவது, முகத்துவாரத்தை தூர் வாரி கடல் நீரை முகத்துவாரத்திற்குள் வந்து சென்று திரும்புவதை எளிதாக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக சென்னை ஐஐடியிடம் அறிக்கை கேட்கப்பட்டு, நவீன திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த 18 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோவளம் கடற்கரையில் கற்கள் கொட்டப்பட்டு பணிகள் நடந்தன.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கின. தற்போது இறுதிக்கட்டமாக முகத்துவார பகுதியில் அளவுக்கதிகமாக இருந்த மணலை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி, ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இப்பணி நடக்கின்றன. இதன் மூலம் கடல் நீரோட்டத்தின் போதும் சீற்றத்தின் போதும் வெளியேறும் அதிகப்படியாக கடல் நீர் முகத்துவாரம் வழியாக செல்லும். இதன் மூலம் கடலில் வளரும் புதர்ச்செடிகள் மற்றும் பாசி உள்ளிட்ட செடிகள் முகத்துவார பகுதியில் வளரத் தொடங்கும்.

கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்யும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து கடல் வளம் பெருகும் என்றும், கடல் சீற்றம் மற்றும் அரிப்பின்போது மீனவர் பகுதியில் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: