மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட மத்திய அரசுக்கு தலைவர்கள் கோரிக்கை

சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயாலளர் கே.பாலகிருஷ்ணன்: மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 அமலானால் மாநில அரசுகளின் உரிமை பறிபோகும். மின்சாரம் சந்தைப் பொருளாக மாறும். வசதி உள்ளவனுக்கே மின்சாரம் என்ற நிலை உருவாகும். ஏழைகளுக்கு மின்சாரம் எட்டாக் கனியாக மாறும். மாநில அரசுகள் அளிக்கும் மானியங்கள் அனைத்தும் ரத்தாகும் சூழல் ஏற்பட்டு, விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கும். இலவச மின்சாரம் ரத்தாகக் கூடிய சூழல் உருவாகும். இது மாநில அரசுகளின் உரிமையை அப்பட்டமாக பறிக்கும் செயல் மட்டுமல்லாமல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும். இச்சட்ட திருத்தம் மாநிலங்களின் வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும். தொழில்கள் மற்றும் விவசாயம் நலிந்து வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்படும்.

எனவே, மத்திய அரசு எக்காரணம் கொண்டும் மக்களைப் பாதிக்கும் இந்த மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ நிறைவேற்றக் கூடாது. அதை உடனே திரும்பப் பெற வேண்டும்.விசிக தலைவர் திருமாவளவன்:  மத்திய அரசு தற்போது கொண்டு வர முயற்சிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை உடனடியாகக் கைவிட வேண்டும். இது மாநில அரசுகளின் அதிகாரத்தில்  தலையிடுவதாகவும்  விவசாயிகளையும் ஏழை மக்களையும்  பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தனியாரிடம் மின்வினியோகம் தாரைவார்க்கப்பட்டால் அவர்கள் நிர்ணயிப்பதே மின் கட்டணமாக இருக்கும், இலவச மின்சாரம் என்பது முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

Related Stories: