சென்னையில் இருந்து செல்லும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

* சென்னையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பயணிகள் வர தயக்கம் காட்டுகின்றனர்

சென்னை: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், புவனேஸ்வர், அந்தமான், விஜயவாடா, கொச்சி, பெங்களூரு, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு 21 விமானங்களும், அந்தந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு 21 விமானங்களும் என 42 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் இருந்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 21 விமானங்களிலும் 2,400 பேர் பயணம் செய்தனர். குறிப்பாக புவனேஸ்வர், அந்தமான், கவுகாத்தி, கொல்கத்தா போன்ற மாநிலங்களுக்கு அதிகளவில் பயணிகள் செல்கின்றனர். ஆனால், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.

நேற்று சென்னை வந்த 21 உள்நாட்டு விமானங்களில் சுமார் 1000 பயணிகள் மட்டுமே சென்னைக்கு வந்தனர். சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் அதிகளவில் செல்கின்றனர். சென்னைக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கு காரணம், சென்னையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பயணிகள் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று  நினைத்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

Related Stories: