மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னை கலெக்டரிடம் மனு

சென்னை: அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி பொதுமக்கள் அளித்த 43,700 மனுக்களை   திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் நேற்று சென்னை கலெக்டரிடம்  வழங்கினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல்  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வேலையின்றி வறுமையில் தவித்து வருகின்றனர்.  இதற்கு தீர்வுகாண திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம், கடந்த ஏப்ரல்  மாதம் 22ம் தேதி முதல், மே 10ம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவும்படி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து, திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள்   தாயகம் கவி, ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியிடம் 14,200 மனுக்களை வழங்கி, பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதேபோல், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள்  ஆர்.டி.சேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ் ஆகியோர் 15,500 மனுக்கள் கலெக்டரிடம் வழங்கினர். தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் ஆகியோர் 13,800 மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தார்.

Related Stories: